Tamil Bayan Points

04) அனைத்து ஆற்றலும் கொண்டவர்

நூல்கள்: யாகுத்பா ஓர் ஆய்வு

Last Updated on March 5, 2022 by

அனைத்து ஆற்றலும் கொண்டவர்

أعطاك من قدرة ما شئت من مستطاع

فأنـت مـقتدر في خـلقه ومـطاع

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்’ என்பது இதன் பொருள்:

ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்த போதும் அவர் விரும்பிய ஆற்றல் அத்தனையும் இறைவன் அவருக்கு வழங்கியதில்லை.

மனித ஆற்றல் ஒரு வரையறைக்கு உட்பட்டது தானே தவிர இறைவனுடைய ஆற்றலைப் போன்று வரையறைக்கு அப்பாற்பட்டது அல்ல. மேலும் விருப்பங்கள் அனைத்தையும் இறைவன் யாருக்கும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

தான் எண்ணிய அனைத்தையுமே சாதிப்பவன் என்ற சிறப்புத் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. இவையனைத்தும் திருக்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து பெறப்படும் இஸ்லாமிய உண்மைகளும் அதன் கொள்கைகளுமாகும். இந்த உண்மைகளுக்கு முரணானதாகவே மேற்கூறப்பட்ட பாடல் அடி இயற்றப்பட்டிருக்கிறது.

மிகப்பெரும் இறைத் தூதர்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்களின் மகன் தனது தந்தையின் வழியைப் பின்பற்றவில்லை. நிராகரிப்பவர்களில் ஒருவானகவே இருந்தான். நிராகரிப்பவர்களை அழிப்பதற்காக இறைவன் மாபெரும் வெள்ளப் பிரளயத்தைத் தோற்றுவித்தான். இறைவனால் தெரிவிக்கப்பட்டதற்கேற்ப நூஹ் நபி அவர்கள் ஒரு கப்பலைச் செய்து அதில் ஆதரவாளர்களுடன் பயணமானார்கள்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி ‘அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!’ என்று நூஹ் கூறினார். . ‘ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீலிருந்து காப்பாற்றும்’ என்று அவன் கூறினான். ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை’ என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

(அல்குர்ஆன்: 11:42,43)

நூஹ், தம் இறைவனை அழைத்தார். ‘என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’ என்றார். (அல்குர்ஆன்: 11:45)

என்று பிள்ளைப் பாசத்தால் காப்பாற்றும்படி கதறினார். அதற்கு இறைவன்,

‘நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லாதது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 11:46)

இதே போன்று இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் தந்தை நேர்வழிக்கு வர வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் விரும்பிய இந்தக் காரியம் கைகூடவில்லை என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

‘சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்’ என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 6:74)

‘என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!. ‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன். என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான். என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்’ (என்றார்.)

(அல்குர்ஆன்: 19:42-45)

தன் தந்தை நேரான வழியை அடைய வேண்டுமென்பதில் இப்ராஹீம் நபிக்கு எவ்வளவு ஆர்வமும், அக்கரையும் இருந்தது என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறியதா? அந்த ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினானா? நிச்சயமாக இல்லை. அவர்களால் தம் தந்தையை நேர்வழிக்குக் கொண்டுவர இயலவே இல்லை. அவர்களின் தந்தை அளித்த மறுமொழி இதை நமக்கு விளக்குகின்றது.

‘இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!’ என்று (தந்தை) கூறினார்.

(அல்குர்ஆன்: 19:46)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பிய ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்துல்காதிர் அவர்களுக்கு விரும்பிய ஆற்றலை எல்லாம் அல்லாஹ் வழங்கி விட்டான் என்று இந்தக் கவிஞன் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் நேர்வழி பெற வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர் மரணப் படுக்கையில் கிடக்கும் சமயத்தில் போதித்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கலலையுற்ற போது (நபியே) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (28:56) என்ற வசனம் இறங்கியது. நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை. அப்துல் காதர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் உயர்ந்தவர் என்று இந்தக் கவிஞன் கருதுகின்றான்.

‘இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’ என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) ‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:90 93

நபியவர்களுக்கு வழங்கப்படாத ஆற்றல் வேறு ஒருவருக்கு இருப்பதாக யார் நம்பினாலும் அவன் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவனாகவே கருதப்படுவான்.

நபியவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்க வேண்டுமென்பதற்காக யூதர்களால் தான் இது புனையப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இந்தக் கவிஞர்களின் நோக்கம் அது தான் என்பதைக் கடைசி வரியில் இந்தக் கவிஞனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் செய்கிறான்.

நபியவர்களின் மதிப்பைக் குறைத்தல்

صلى الإله مدى ما الغوث الأعظم قام

عـلى محمـد الــعالي لخير مـقام

என்று கவிதையை இவன் முடிக்கிறான்.

கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரிவானாக!’

என்பது இதன் கருத்து,

‘நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும்’ என்று இவன் பாடியிருந்தால் நபியை உரிய விதத்தில் மதித்திருக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்கிறான்.

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இது போன்ற கவிதைகளின் உண்மையான நோக்கம்.