Tamil Bayan Points

03) மாற்றம் அடையாத அடிப்படைகள்

முக்கிய குறிப்புகள்: நாஸிக் - மன்ஸூக்

Last Updated on March 14, 2022 by Trichy Farook

மாற்றம் அடையாத அடிப்படைகள்

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எடுத்துரைத்த சில அடிப்படையான அம்சங்களில் மாற்றம் என்பது ஒரு போதும் வராது. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

  1. வரலாற்றுத் தகவல்கள். வஹியின் மூலம் உறுதி செய்யப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் மற்றும் செய்திகளில் மாற்றம் என்பது ஏற்படாது. ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு, 1967ல் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. அப்படிக் கூறினால் இரண்டில் ஒன்று பொய்யாகும்.  இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.
  2. எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் நன்மை பயக்கும் என்ற அடிப்படையில் இறைவன் கட்டளையிட்ட அடிப்படைகள் ஒரு போதும் மாற்றப்படாது.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை, இறைநம்பிக்கையின் அடிப்படைகள், வணக்கங்களின் அடிப்படைகள், உண்மை பேசுதல், சுயமரியாதை, வீரம், வாரிவழங்குதல் போன்ற நற்குணங்கள் இது போன்றவை ஒரு போதும் மாற்றப்படாது.

இறைவனால் கட்டளையிடப்பட்ட இந்த அடிப்படைகள் ஒரு போதும் தீய விளைவை ஏற்படுத்தாது. எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் கெட்டவையாகக் கருதப்பட்டும் இறைவனால் தடைசெய்யப்பட்ட விஷயங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட்ட சட்டமாகாது.

இறைவனுக்கு இணைகற்பித்தல், இறைவனை மறுத்தல், தீய குணங்களான பொய் கூறுதல், அநியாயம் செய்தல், கோழைத்தனம், கஞ்சத்தனம், ஆபாசம், மானக்கேடான காரியங்கள் இன்னும் இது போன்ற தடுக்கப்பட்ட விஷயங்களை இறைவன் ஒருபோதும் பொதுவான சட்டமாகவோ, அனுமதிக்கப்பட்டதாகவோ ஆக்கமாட்டான்.

இறைவனால் தடுக்கப்பட்ட இந்த அடிப்படைகள் ஒரு போதும் நல்ல விளைவை ஏற்படுத்தாது. நிர்ப்பந்த நிலையில் கொடுக்கப்படும் அனுமதிகளையும், நன்மைக்காக விதிவிலக்கு அளிக்கப்பட்ட சில காரியங்களையும் மேற்கண்ட பொதுவான அடிப்படைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கூடாது.

நிர்ப்பந்த நிலையில் வெறும் வாயளவில் குஃப்ரான வார்த்தையைக் கூறுவதற்கு உள்ள அனுமதியையும், நன்மையை நாடிப் பொய் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களையும் மேற்கண்ட பொதுவான அடிப்படைகளுக்கு முரணாகக் கருதக்கூடாது.