Tamil Bayan Points

05) ஜீலானிக்கு வஹீயா? – ஜீலானியின் போதனைகள்

நூல்கள்: யாகுத்பா ஓர் ஆய்வு

Last Updated on March 5, 2022 by

அப்துல் காதிர் ஜீலானிக்கு வந்த வஹீ

وقـد أتـاك خـطاب الله مـستمعـا

يا غـوث الأعـظم كن بالقرب مجتمعا

أنـت الـخليفة لي فى الـكون ملتمعا

سـميت باسـم عـظيم محيى الـدين

‘காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர்’ என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.

என்பது இந்த நான்கு அடிகளுக்கும் பொருள். இந்த நான்கு வரிகளில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

* அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.

* அப்துல் காதிர் (கவ்ஸுல் அஃலம்) மகத்தான இரட்சகராக இருக்கிறார்.

* மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை மனிதர்கள் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவர்களுக்கு இதைச் சூட்டினான்.

* மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.

* அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுக்கு கலீஃபாவாக இருக்கிறார்.

* இவைகளை அல்லாஹ்வே அவர்களை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களையும் இந்தக் கவிதை வரிகள் மறைமுகமாக அல்ல; தெளிவாகவே சொல்கின்றன.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளன. இதில் எந்தக் கருத்துமே ஏற்புடையதல்ல.

அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்மும் இதை நம்ப மாட்டான். நபிமார்களின் வருகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு நிறைவுபடுத்தி விட்டதாக இறைவன் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன் 5:3)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்றபின் வேறு எவருடனும் இறைவன் எதற்காகப் பேச வேண்டும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே? உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற உயர் அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிலாகித்துக் கூறப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட உரையாடாத இறைவன் அவர்களின் தரத்தை அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான்; நேரடியாகப் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹீ வருகிறது என்றும் உளறிய போது தனக்கு வஹீ வருகின்றது என்று சொன்னவனையும், அவனது கூற்றை நம்பியவர்களையும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்; காபிர்கள் என்று பத்வா அளித்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா’ பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று பத்வா அளிக்காததோடு தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லரைக்காக வீடுகளில் போய் ஓதிவிட்டு வரவும் எப்படித் துணிந்தார்கள்?

யா குத்பாவை ஆதரிப்பவர்களுக்கும், காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த நச்சுக் கருத்துக் கூட இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தோன்றாமல் போனது ஏன்?

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உரையாடல் அல்லாஹ்வுக்கும் அப்துல்காதிர் ஜீலானிக்கும் நடந்ததாக இந்தக் கவிதையை எழுதியவன் கூறுகிறான். இவ்விருவருக்கும் இரகசியமாக நடந்த இந்த உரையாடலை மூன்றாம் நபராகிய இந்தக் கவிஞன் அறிய வேண்டுமானால் அது எப்படிச் சாத்தியமாகும்?

உரையாடிய அல்லாஹ் இதைச் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி சொல்லியிருக்க வேண்டும்; தனது நூல்களில் எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வும் சொல்லவில்லை; அப்துல் காதிர் ஜீலானியும் சொல்லவில்லை என்றால் இந்தக் கவிஞனுக்கு இது எப்படித் தெரிந்தது? இவ்வளவு பைத்தியக்காரத்தனமான கருத்தை எப்படி ஒரு சமுதாயம் நீண்ட காலமாக அனுமதித்து வருகிறது?

அல்லாஹ் அவரோடு பேசினான் என்று சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன பேசினான் என்பதைக் கவனித்தால் அதை விடவும் பிதற்றலாகவல்லவா உள்ளது?

மகத்தான இரட்சகரே’ என்று இறைவன் பேசினானாம்!

‘மகத்தான இரட்சகரே!’ என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை இக்கவிஞன் உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ் மகத்தான இரட்சகர் எனக் கூறவில்லை.

திருமறை நெடுகிலும் தன்னை மட்டுமே மகத்தான இரட்சகனாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்லாஹ் தன்னுடைய அடிமையை மகத்தான இரட்சகரே என்று அழைத்தான் என்றால் எந்தப் புத்திசாலி தான் இதை நம்ப முடியும்?

இவரை நபியாக ஆக்கியதோடு நின்று விடாமல் அல்லாஹ்வாக அல்லவா ஆக்கி விடுகிறான் இந்தக் கவிஞன்? அல்லாஹ்வே இவரை மகத்தான இரட்சகர்’ என்று அழைத்து விட்டதாகக் கூறும் போது அல்லாஹ்வுக்கு மேலானவராகவல்லவா இவர் சித்தரிக்கப்படுகின்றார்? சராசரி முஸ்லிமுடைய இரத்தமும் கொதிக்கக்கூடிய இந்த விஷக் கருத்தை பக்திப் பரவசத்துடன் எப்படித் தான் ஒதி வருகின்றார்களோ? மக்களுக்கு வேண்டுமானால் இதன் அர்த்தம் தெரியாமலிருக்கலாம். ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்ற மவ்லவிகள், அதற்கு மேலும் கற்ற பாஸில்கள் இதற்கு வெண்சாமரம் வீசுவது தான் விந்தையாக உள்ளது.

இந்த நச்சுக் கருத்து தவறு என்பதற்குக் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் கூட ஆதாரம் தேவை இல்லை. அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் எழுத்துக்களும், அவர்களின் பேச்சுக்களும் இதைப் பொய்யெனப் பறை சாற்றுகின்றன. இதை எழுதியவன் மடையன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அதைப் பார்ப்போம்.

குன்யதுத் தாபீன் – புதூஹுல் கைப் – அல்பதஹுர் ரப்பானி

அப்துல் காதில் ஜீலானி அவர்கள் தம் கையால் எழுதிய குன்யதுத் தாபீன்’ அவர்கள் சொற்பொழிவுத் தொகுப்புகளாகிய புதூஹுல் கைப்’ அல்பதஹுர் ரப்பானி’ ஆகிய நூல்களில் இவற்றைப் பரவலாகக் காண முடியும்.

إذا ركنت إلى غيره فقد أشركت

இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்து விட்டாய்.

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஃபுதூஹுல் கைப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

لا تشك من الخالق إلى الخلق بل أشك إليه هو الذي يقدر وأما غيره فلا

படைத்தவனை விடுத்து படைக்கப்பட்டவர்களிடம் நீ முறையிடாதே! அல்லாஹ் தான் (அனைத்திற்கும்) சக்தி பெற்றவன். மற்றவர்களுக்கோ எந்தச் சக்தியுமில்லை.

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியதாக அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய அல்ஃபத்ஹுர் ரப்பானியில் இடம் பெற்றுள்ளது.

أجيبوني فإني داعي الله عز وجل أدعوكم إلى بابه وطاعته لا أدعوكم إلى نفسي المنافق ليس يدعو الخلق إلى الله عز وجل هو داع إلى نفسه

‘என் சொல்லைக் கேளுங்கள்! நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவன். அவனுக்கு வழிப்பட்டு நடப்பதற்கும், அவனது வாசலுக்கும் தான் உங்களை நான் அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்காமல் தன் பக்கம் அழைப்பவன் முனாஃபிக் (எனும் வேஷதாரி) ஆவான்’

என்பதும் அவர்களின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும். மேற்கூறிய அதே நூலில் இது இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வைத் தவிர உதவுபவன் எவனுமில்லை

لا معين إلا الله

என்றும்

به يكشف كل عمة وبلاء

அவன் மூலமே எல்லாக் கவலைகளும், சோதனைகளும் விலகும்

என்றும் தம் கைப்பட எழுதிய குன்யதுத் தாபீன்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

استوصى عبد الوهاب والده الشيخ رضي الله عنه في مرض موته فقال رضي الله عنه عليك بتقوى الله وطاعته ولا تخف أحدا ولا ترجه وكل الحوائج كلها إلى الله عز وجل ولا تعتمد إلا عليه سبحانه التوحيد التوحيد وجماع الكل التوحيد

வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத் தவிர எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு! அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய புதூஹுல் கைப்’ நூலில் இது இடம் பெற்றுள்ளது. அல்ஃபத்ஹுர் ரப்பானியிலும் ஏறக்குறைய இதே கருத்து இடம் பெற்றுள்ளது.

لا محيص لمخلوق من القدر المقدور الذي خط في لوح مستور وأن الخلائق لو جهدوا أن ينفعوا المرء بما لم يقضه الله تعالى لم يقدروا عليه ولو جهدوا أن يضروه بما لم يقضه الله لم يستطيعوا

விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெற்றிருக்கவில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தி விட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெறாது

என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது குன்யதுத் தாலீபீன்’ நூலில் வரைந்து உள்ளார்கள்.

أنه قسم الأرزاق وقدره فلا يسدها ساد ولا يمنعها مانع لا زائدها ينقص ولا ناقصها يزيد ولا ناعمها يخشن ولا خشنها ينعم

இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்து விட்டான்; அதைத் தடுப்பவன் எவனும் இல்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை, குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப் போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப் போவதில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப் போவதுமில்லை

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.

ومن ذلك أن الإمام يعلم كل شيئ ما كان وما يكون

ஒரு பெரியார் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும் வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும் என அந்தப் பெரியார் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.

يكره من الألقاب والأسماء ما يوازي أسماء الله

அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும், பட்டப்பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும். எனவும் அவர்கள் தமது குன்யதுத் தாலிபீனில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூடாது என்று தீர்ப்பளித்துள்ள கவ்துல் அஃலம்’ மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டுபவர்களின் நிலையை என்னவென்பது?

أن الأموات يرجعون إلى الدنيا

இறந்தவர்கள் இந்த உலகத்துக்குத் திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிஜியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும்

என்றும் அந்த பெரியார் தமது குன்யதுத் தாலீபீன் நூலில் தம் கையால் வரைந்துள்ளார்கள்.

அறிவுடைய மக்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்தப் போதனை போதுமானதாகும். அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் எல்லாத் தேவைகளையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய அல்லாஹ்வின் நல்லடிமைகளில் ஒருவராகத் திகழ்ந்த அப்பெரியாரின் பெயரால் எவ்வளவு பெரிய பொய்களைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக உணர முடியும்.

قد قمت بالصدق والإخلاص والزهـد

والإجـتهاد وفي الـوعـد والـعهـد

فكل أهـل التـقى والزهـد والجهـد

يـدعوك يا غـوث الأعظم محيي الدين

உண்மை உளத்தூய்மை, பற்றற்ற நிலை (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகியவற்றைக் கைக்கொள்வதில் தாங்கள் உறுதியாய் நின்றீர்கள்; வாக்குறுதிகளையும், உடன்பாடுகளையும் நிறைவேற்றுபவராய்த் திகழ்ந்தீர்கள். எனவே முஹ்யித்தீன் அவர்களே! இறையச்சம், பற்றற்ற நிலை, (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகிய பண்புகளையுடையோர் அனைவரும் தங்களை யா கவ்ஸல் அஃலம் எங்களின் மகத்தான இரட்சகரே’ என்று அழைக்கின்றனர் என்கிறார்.

இறையச்சமும், வணக்க வழிபாடுகளில் ஆர்வமுமுடைய யாராவது இறைவனைத் தவிர வேறு யாரையும், காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே என அழைக்கத் துணிவார்களா என்ன?