Tamil Bayan Points

06) இருட்டு திக்ர்

நூல்கள்: யாகுத்பா ஓர் ஆய்வு

Last Updated on March 5, 2022 by

இருட்டு திக்ர்

ومـن يـنادي اسمـي ألـفا بخلـوته

عـزمـا بـهمتـه صـرما لـغفوته

أجـبته مـسرعا مـن أجـل دعوتـه

فالـيدع يا عـبد الـقادر محيي الدين

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்’ எனவே ஓ! அப்துல் காதிர் முஹ்யித்தீனே!’ என்ற அவர் (என்னை) அழைக்கட்டும் (என்றும் தாங்கள் கூறினீர்கள்)

بـعد الصـلاة اثنتي عـشرة من ركعة

مـع الفـواتـح والإخلاص بالخضعة

يا غـوث الأعـظم عبد القادر السرعة

يـا سيـدي احـضرني يا محيي الدين

சூரத்துல் பாத்திஹாவும், சூரத்துல் இக்லாஸும் ஓதி உள்ளச்சப்பாட்டுடன் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுத பின்னர் ‘காப்பாற்றும் மகத்தான இரட்சகரே! அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! விரைந்து வாரும் என் தலைவரே! என்னிடம் ஆஜராகும். ஓ! முஹ்யித்தீனே!’ என்று அவர்கள் என்னை அழைக்கட்டும் (என்றும் கூறினீர்கள்)

என்று அந்த மாமேதை மீது மாபெரும் களங்கத்தையும், இட்டுக்கட்டையும் சுமத்தியிருக்கிறான் இந்தக் கவிஞன். இறைவனல்லாதவர்களைத் தமது இன்னல்களை நீக்குமாறும், துன்பங்களை அகற்றுமாறும், உதவிகள் புரியுமாறும் அழைப்பதற்கு திருக்குர்ஆன், நபிமொழிகளில் எங்காவது ஆதாரமுண்டா? அவ்வாறு அல்லாஹ் அல்லதவர்களை அழைப்பவனும் ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளனாக இருக்க முடியுமா? இறைவனுக்கு இணை கற்பிக்கும் இந்த மன்னிக்க முடியாத மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலைநிறுத்திடும் அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பிறருக்குக் கட்டளையிட்டிருப்பார்களா?

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

அல்குர்ஆன் 7:197

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

நமக்கு உதவிகள் செய்யவும், நமது துன்பங்களை நீக்கவும் இறைவன் ஒருவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்பதற்கும், அவனல்லாத யாருக்கும் நமது அழைப்பைச் செவியேற்று ஆவண செய்திடவோ நமது பிரார்த்தனைகளை அங்கீகரிக்கவோ அணுவத்தனை அதிகாரமுமில்லை என்பதற்கும் இந்த இறைவசனங்கள் அனைத்தும் சிறந்த சான்றுகளாகும்.

இந்த இறை வசனங்களுக்கு நேர் எதிராக உங்கள் துன்பங்களை அகற்றிடவும், தேவைகளை நிறைவேற்றிடவும், அப்துல் காதிர் ஜீலானி அவர்களே எதிர் வந்து இன்னல் தீரும்’ என்று என்னையே அழையுங்கள். நான் உங்கள் அழைப்புக்கு மறு மொழி சொல்கின்றேன். எதிர் வந்து இன்னல் தீர்க்கிறேன் என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியிருப்பார்களா? இது அவர்கள் மீது கட்டி விடப்பட்டிருக்கும் எவ்வளவு பெரிய இட்டுக்கட்டு?

இஸ்லாமியக் கொள்கைப்படி இறைவன் எண்ணிக்கையால் மட்டும் ஒருவனல்ல; தனது பண்புகளிலும் அவனைப் போன்ற இன்னொருவர் இல்லாத அளவுக்குத் தனித்துவமானவன்.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றார்கள் என்று நம்புவது மாத்திரம் இறைவனுக்கு இணை கற்பிக்கும் மிகப் பெரும் குற்றமல்ல; அவனது பண்புகளைப் போன்ற பண்புகள் இன்னொருவரிடம் இருப்பதாக நம்புவதும் கூட இறைவனுக்கு இணை கற்பிக்கும் மன்னிக்க முடியாத மிகப்பெரும் குற்றம் தான்.

இந்த மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறினார்கள் என்று இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பது எவ்வளவு பெரிய தவறு? மார்க்கத்தோடு விளையாடும் இவர்கள் மறுமை நாளில் இதற்கெல்லாம் இறைவனிடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

குர்ஆன், ஹதீஸ் அடிப்படைகளையே இந்தக் கவிதை வரிகள் தகர்த்தெறிவதுடன், சுன்னத் ஜமாஅத் எனத் தங்களைக் கூறிக் கொள்வோர் எவற்றைச் சட்ட நூல்கள் என நம்பி இருக்கிறார்களோ அந்த நூல்களிலும் கூட இது போன்ற நம்பிக்கை இறைவனுக்கு இணை வைத்தல் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றனர். அவர்களே ஏற்றுக் கொண்ட அந்த நூல்களை நம்பியாவது இதை விட்டொழிப்பார்களா?

சுன்னத் ஜமாஅத் என்ற தம்மைக் கூறிக் கொள்வோரால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது அப்துல் ஹை லக்னோ அவர்களால் வழங்கப்பட்ட பத்வாக்கள் தொகுப்பு (மஜ்மவுல் ஃபதாவா) வில் இடம் பெறும் தீர்ப்பு வருமாறு:

கேள்வி எண்:300: வலிமார்கள் என்ற இறை நேசர்கள் அருகிலிருந்தோ, தொலைவிலிருந்தோ, தம்மை அழைப்பவர்களின் அழைப்பைச் செவியுறுகிறார்கள்; அவ்வாறு தான் அழைக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்’ என்று நம்பி, தம்முன்னே இருக்கும் ஒருவனை அழைப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளால் அவர்களை அழைத்து அவர்களிடம் உதவி கோருவதுடன், கால்நடைகளை அவர்களுக்காக நேர்ச்சை செய்து விட்டேன் என்று குறிப்பிடும் ஒரு மனிதன் பற்றித் தங்களின் கருத்து என்ன? தெளிவுபடுத்துங்கள்; இறைவனிடம் கைமாறு வழங்கப்படுவீர்.

பதில்: இம்மனிதன் கொள்கை கெட்டவன். இவனிடம் குஃப்ர் என்ற இறை நிராகரிப்புத் தன்மை கூட இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில் வலிமார்கள் (செவியுற முடியாத) தொலைவிலிருக்கும் நிலையிலும் (அவர்களை அழைப்பவர் குரலைச்) செவியுறுகிறார்கள் என்பது ஆதாரமற்ற நிரூபணமில்லாத விஷயமாகும். அனைத்துப் பிரச்சனைகளையும், முக்காலங்களையும் பற்றிய பொதுவான ஞானம் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. மேலும், எவர்கள் தமது குருமார்களின் ஆன்மாக்கள் (தமது அழைப்பை ஏற்று) வருகை தருகின்றன. (தமது அழைப்பைப்) புரிந்து கொள்கின்றன என்று சொல்கின்றார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்களாகி விட்டார்கள். எவன் அல்லாஹ்வின் சாட்சியாகவும், அவனது திருத்தூதரின் சாட்சியாகவும் என்று கூறி மணமுடித்துக் கொள்கிறானோ அவனும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிராகவே ஆகி விட்டான். ஏனெனில் இதன் மூலம் அவன் (இறைவனால் அறிவிக்கப்படாது எல்லா மறைவானவற்றையும் திருத்தூதர் தாமே சுயமாக) அறிந்து கொள்கிறார்கள் என்ற நம்பி விட்டான். அவ்வாறு நம்புவது ‘அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானதை அறிவேன் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 6:50) என்ற இறை வசனத்திற்கு முரணானது என்று ஃபதாவா பஜ்ஜிய்யா என்ற மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு நூலில் அந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்கள். ‘அல்பஹ்ருர் ராயிக்’ அத்துர்ருல் முஃக்தார்’ போன்ற சட்ட நூல்களிலும், ஏனைய சட்ட நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கேற்ப இறைவனல்லாதவர்களுக்காக நேர்ச்சைகள் செய்வது ஹராம். தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

(நூல்: ‘மஜ்மவுல் ஃபதாவா’ , ஆசிரியர்: முஹம்மது அப்துல்ஹை, லக்னவி பக்கம் 361)

இது ஷிர்க் என்ற இணை கற்பிக்கும் பெரும் பாவமில்லையா? என்று அவர்களிடம் கேட்டால் திருக்குர்ஆனில் அவ்வாறு கண்டிக்கப்பட்டிருப்பது பிற சமயத்து தெய்வங்களான சிலைகள் போன்றவற்றை அழைப்பவர்களைத் தான். நாதாக்களையும், நல்லடியார்களையும் பிரர்த்தித்து அழைப்பதையோ அவர்களை எதிர் வந்து இன்னல் தீர்க்குமாறு கோருபவர்களையோ அல்ல என்று திருக்குர்ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்றவர்களாகப் பிதற்றுகிறார்கள்.

மக்கத்து காஃபிர்களின் கொள்கை எதுவாக அமைந்திருந்ததோ அதனையே இவர்களும் கூறி தங்களின் கொள்கையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் கடவுள் கொள்கை எத்தகையதாக அமைந்திருந்தது? என்பதை அறிந்து கொண்டால் தான் இவர்களின் கொள்கைகளுக்கும், மக்கத்து காபிர்களின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவுமே கிடையாது என்பதை உணர முடியும்.

மக்கத்து காஃபிர்கள் தங்களை இப்ராஹீம் நபியின் வழியில் நடப்பவர்கள் என்றே நம்பினர். இப்ராஹீம் நபியையும், இஸ்மாயீல் நபியையும் மதிக்கின்றோம் என்ற பெயரால் அவர்களையும், மற்றவர்களையும் வழிபட்டு வந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் பிரவேசித்த போது அங்கே இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோன் உருவச் சிலைகளைக் கண்டார்கள். அவற்றை அப்புறப்படுத்திய பிறகே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3351, 3352, 4289

இன்றைய மக்கள் கொண்டாடுகின்ற பெரியார்களை விடவும் பல்லாயிரம் மடங்கு இப்ராஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் உயர்வானவர்களில்லையா?

‘யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்’ என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

சிலைகளை, தேவதைகளை வணங்கியவர்களை இங்கே நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிடவில்லை. மாறாக நபிமார்களையும், அவர்களது அடக்க ஸ்தலங்களையும் வணக்க ஸ்தலங்களாகக் கருதுவதைத் தான் கண்டிக்கின்றார்கள்.

சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; நல்லடியார்களையும் அவர்களது சமாதிகளையும் வணங்கலாம்’ என்ற இவர்களின் கூற்று நியாயமற்றது என்பதை மேற்கண்ட சான்றுகள் கூறுகின்றன.

மக்கத்துக் காஃபிர்கள், யாகுத்பா பக்தர்கள் அளவுக்குக் கூட கடவுள் தன்மைகளைப் பெரியார்களுக்கு வழங்கவில்லை.

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:84,85)

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:86,87)

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:88,89)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

(அல்குர்ஆன் 29:61)

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 31:25

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அல்குர்ஆன் 43:87)

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள்; அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

பெரியார்கள், நல்லடியார்கள் பற்றி மக்கத்துக் காஃபிர்களின் அதிகபட்ச மரியாதை எத்தகையதாக இருந்தது என்பதையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

மக்கத்துக் காஃபிர்களின் கொள்கையை விடவும் மோசமான இந்த நம்பிக்கையின் பால் மக்களை அழைக்கும் இந்தக் கவிதையை இனி மேல் பாடலாமா? என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ்வின் படைப்புக்களிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிக் கூட இப்படியெல்லாம் எவரும் நம்பி விடக் கூடாது என்பதால் இறைவன் நபியவர்களைப் பின்வருமாறு கூறும்படிக் கட்டளையிடுகிறான்.

‘அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:26

‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:15

‘அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தினால் இஸ்லாத்தை ஏற்பதாக காஃபிர்கள் கேட்டுக் கொண்ட போது

‘என் இறைவன் மிகவும் தூய்மையானவன். நான் மனிதனாகவும், தூதராகவும் தான் இருக்கிறேன்’ என்று கூறுவீராக! (17:93)

என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

‘தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 46:9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனது வல்லமையில் எந்தப் பங்கையும் பெற்றிருக்கவில்லை என்பதை இதை விடத் தெளிவாக எவரும் சொல்ல முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் வழங்காத வல்லமைகளையும், ஆற்றல்களையும் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு இறைவன் வழங்கி விட்டதாகக் கூறும் இந்தக் கதைகளை இனியும் பாடலாமா?

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது’ என்று கூறுவீராக! இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

அல்குர்ஆன் 17:56, 57

இந்த வசனத்தில் எவர்களை நீங்கள் உங்களின் இன்னல்களை அகற்றிடும்படி அழைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களால் உங்களின் இன்னல்களை அகற்றிடவோ, உதவிகள் செய்திடவோ இயலாது என்ற கருத்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் நீங்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் அந்த ஏந்தலர்களே தமது இறைவனை நெருங்கிட முயற்சித்தவர்களாகவும், அவனது அருளை எதிர்பார்த்தவர்களாகவும், அவனது தண்டனையை அஞ்சியவர்களாகவுமே வாழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

வேறு சிலரோ நாம் உலகவாழ்வில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதையும், கைமாற்று, கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வதையும் சுட்டிக்காட்டி, இறைவனிடம் தான் உதவி கேட்க வேண்டுமென்றால், பின்னர் ஏன் மற்றவர்களிடம் கைமாற்று கேட்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறீர்கள் என்று குட்டையைக் குழப்புகிறார்கள்.

உலக வாழ்வில் செய்து கொள்ளப்படும் பரஸ்பர உதவிகளை நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் என்று இறைவனே தமது திருமறையில் அனுமதித்திருக்கிறான்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

அல்குர்ஆன் 5:2

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதாகவும், இறைவனாலேயே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.

இன்று எனக்கு ஒரு உதவி செய்தவருக்கு நாளை நான் ஒரு உதவி செய்திட நேர்ந்திடலாம். இன்று எனக்கு கைமாற்றுத் தந்து உதவியவருக்கு நாளைக்கு என்னிடம் கைமாற்றுக் கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இறந்து விட்டவர்களிடமும், இறைநேசர்களிடமும், சிலைகளிடமும் கேட்கப்படும் உதவிகள் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படுபவைகளாக இருக்கின்றன. எப்பொழுதும் அந்த நல்லவர்களும், நாதாக்களும் தான் இவர்களால் உதவி கேட்கப்படவும் பிரார்த்தித்து அழைக்கப்படவுமாக இருக்கின்றார்களே தவிர அவர்கள் இவர்களை அழைப்பதும் இவர்களிடம் உதவி கேட்பதும் நடப்பதே இல்லை.

எனவே உலக வாழ்வில் நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் பிறரிடம் கேட்கும் உதவியைக் காரணம் காட்டி வலிமார்களிடம் உதவி கேட்கலாம் என்று இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடிபட்டுப் போய் விடுகின்றது.

உயிருடன் உள்ளவரிடம் பரஸ்பரம் உதவி தேடுவதற்கும், இறந்து விட்ட நல்லடியார் ஒருவரிடம் உதவி தேடுவதற்கும் அடிப்படையில் அனேக வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

நாம் உயிருடனுள்ள ஒருவரிடம் உதவி தேடும் போது அவரிடம் தெய்வீக அம்சம் இருப்பதாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாம் நம்புவது கிடையாது. அவரை நம்மைப் போன்ற ஒரு மனிதராகவே நம்புகிறோம். இறந்து விட்டவரிடம் தேடப்படும் உதவி இவ்வாறு அமைந்திருக்கவில்லை.

ஒரு மனிதனிடம் அதாவது உயிருடனுள்ள மனிதனிடம் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலர் அவரிடம் உதவி தேடினால் அவரால் அனைத்தையும் ஒரு நேரத்தில் கேட்க முடியாது என்று நாம் நம்புகிறோம். ஆனால் இறந்து விட்டவரிடம் ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றார்கள். அனைவரது பிரார்த்தனைகளையும் அவரால் கேட்க முடியும் என்றும் நம்புகின்றனர். இறைவன் எப்படி ஒரு சமயத்தில் பல கோடிப் பிரார்த்தனைகளைக் கேட்க முடியுமோ அதே போல் இவரும் கேட்கிறார் என்றால் கேட்கும் திறனில் இறைவனும், இவரும் சமமாவார்கள் என்று ஆகிவிடாதா?

உயிருடனுள்ளவர்களிடம் உதவி தேடும் போது ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தான் உதவி தேடுவோம். அவரது உதவிக்கு வரம்பு உண்டு என்று திட்டவட்டமாக நாம் நம்புகின்றோம். ஆனால் இறந்தவர்களிடம் உதவி தேடும் போது அவரால் எதுவும் செய்ய முடியும் என நம்புகின்றனர். இங்கேயும் இறைவனுக்குச் சமமாக அவரை ஆக்கி விடுகின்றனர்.

நாம் எவரிடமாவது உதவி தேடினால் அவருக்கு அருகில் சென்று கேட்டால் தான் அவருக்கு விளங்கும் என்று நம்புகிறோம். இங்கே இருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ளவரிடம் (தொலைபேசி போன்ற சாதனங்கள் இன்றி) உதவி தேட முடியாது எனவும் நம்புகிறோம். ஆனால் இறந்துவிட்டவர் எவ்வளவு தொலைவில் இருந்து கேட்டாலும் அதைச் செவியுற முடியும் என்று நம்புகின்றனர். இறைவனது கேட்கும் திறனுக்கு எப்படித் தூரங்கள் தடையாக முடியாதோ அது போன்ற நிலையில் அவரைக் கருதுகின்றனர். இரண்டும் எப்படிச் சமமாக முடியும்?

உயிரோடு உள்ளவரிடம் உதவி தேடுவது என்றால் அவருக்குத் தெரிந்த மொழியில் மட்டும் தான் தேட முடியும். அவருக்குத் தெரியாத மொழிகளில் கேட்டால் அவருக்குப் புரியாது எனவும் நம்புகிறோம். ஆனால் எந்தப் பாஷையில் கேட்டாலும், உயிருடன் அவர் இருந்த சமயத்தில் அவர் அறிந்திராத பாஷையில் கேட்டாலும் இறந்தவர் அதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றனர். இறைத் தன்மையில் அவருக்குப் பங்கிருப்பதாகப் பறை சாற்றுகின்றனர்.

உயிரோடு உள்ளவர்களிடம் தேடப்படும் உதவிகள் நம் புலன்களுக்குத் தெரியும் விதமாக நம்மை அடைகின்றன. நாம் பத்து ரூபாய் கேட்டால் அவர் பத்து ரூபாயை எடுப்பதும் அதை நம்மிடம் தருவதும் நம் புலன்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

ஒரு மருத்துவரிடம் சென்று உதவி தேடினால் அவர் தரும் மாத்திரைகளும், ஊசியும் நம் புலன் உணர்வுக்குப் புலப்படுகின்றது.

ஆனால் இறந்தவரிடம் கேட்கப்படும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை. நம் புலன்களுக்குப் புலப்படாத வகையில் புறச் சாதனங்களின் துணையின்றி இறைவன் அளிக்கும் உதவி போன்ற நிலையில் இது கருதப்படுகின்றது.

இது போல் இன்னும் அனேக வித்தியாசங்கள் உள்ளன. உயிருடன் உள்ளவர்களிடம் உதவி தேடுவதையும், இறந்தவர்களிடம் உதவி தேடுவதையும் சமமாகக் கருதுவதற்கும், அது கூடும் என்பதால் இதுவும் கூடும் எனக் கருதுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.