Tamil Bayan Points

05) நாஸிக் எத்தனை வகைகள்?

முக்கிய குறிப்புகள்: நாஸிக் - மன்ஸூக்

Last Updated on September 29, 2022 by Trichy Farook

நாஸிக் எத்தனை வகைகளில் இருக்கும்?

மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸூக்” என்றும் முந்தைய சட்டத்திற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ‘‘நாஸிக்” என்றும் குறிப்பிடப்படும் என்பதை முன்னர் கண்டோம்.

இந்த ‘‘நாஸிக்” பின்வரும் வகைகளில் இருக்கும்.

குர்ஆனின் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுதல்

திருமறைக்குர்ஆனில் ஒரு வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மற்றொரு திருக்குர்ஆன் வசனம் மாற்றிவிடும்.

இதற்கு உதாரணமாக 8:65 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை 8:66 வது வசனம் மாற்றிவிட்டதைக் கூறலாம். இது பற்றி நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஹதீஸின் சட்டத்தை குர்ஆன் வசனம் மூலம் மாற்றுதல்

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள் என்பது ஹதீஸ்களில் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்ததை அல்பகரா 2:144 முதல் 150 வரையிலான வசனங்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என மாற்றிவிட்டன.

2:144 قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ , فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

(அல்குர்ஆன்:2:144.)

மேற்கண்ட வசனத்தில் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்கித் தொழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவ்வாறு ஹதீஸில் கூறப்பட்ட சட்டத்தை குர்ஆன் வசனம் மாற்றும்.

ஹதீஸின் சட்டத்தை ஹதீஸ் மாற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் தாம் விதித்த சட்டத்தை தாமே மாற்றியிருப்பார்கள். இதற்கு நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எடுத்துரைத்த உதாரணங்களே போதுமானதாகும்.

கப்ரு ஜியாரத்தை நபியவர்கள் முதலில் தடுத்தார்கள். பின்னர் அது நபியவர்கள் மூலமே அனுமதிக்கப்பட்டது.

முத்ஆ திருமணத்தை முதலில் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அதனை நபியவர்களே கியாமத் நாள் வரை தடைசெய்யப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள்.

இது போன்று ஹதீஸில் கூறப்பட்ட சட்டத்தை ஹதீஸே மாற்றியிருக்கும்.

இது வரை நாம் நாஸிக் என்பதின் மூன்று வகைகளைக் கண்டோம்.

  1. குர்ஆன் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுவது.
  2. ஹதீஸின் சட்டத்தை குர்ஆன் வசனத்தின் மூலம் மாற்றுவது.
  3. ஹதீஸின் சட்டத்தை ஹதீஸின் மூலம் மாற்றுவது.

ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்தை ஹதீஸ் மாற்றாது.

ஹதீஸ் என்பது குர்ஆனுக்கு முரணாக இருக்காது. ஏனெனில் அல்லாஹ் நபிகள் நாயகம் குர்ஆனுக்கு விளக்கமாகப் பேசுவார்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளான்.

 وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்:16:44.)

16:64 وَمَاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ اِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِى اخْتَلَـفُوْا فِيْهِ‌ۙ

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம்.

(அல்குர்ஆன்:16:64.)

மேற்கண்ட வசனங்களில் இருந்து நபியவர்களின் பேச்சு குர்ஆனுக்கு விளக்கமாக மட்டும்தான் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே குர்ஆனில் கூறப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் ஹதீஸ் மாற்றாது என்பது சரியான அடிப்படையாகும்.

பின்வரும் வகைகளில் ஹதீஸ் குர்ஆனுக்கு விளக்கமாக அமையும்.

  1. குர்ஆன் கூறும் கருத்தை ஹதீஸும் உறுதிப்படுத்தும்.
  2. குர்ஆனில் சுருக்கமாகக் கூறப்பட்டதை ஹதீஸ் விரிவாக எடுத்துரைக்கும். தொழ வேண்டும் என்ற கட்டளை குர்ஆனில் உள்ளது. எப்படித் தொழவேண்டும்? எந்த நேரங்களில் தொழ வேண்டும்? கடமை எவை? சுன்னத் எவை? என்பது போன்ற விளக்கங்கள் ஹதீஸில்தான் உள்ளன.
  3. குர்ஆன் ஒட்டுமொத்தமாகக் கூறும் விஷயங்களில் எது விதிவிலக்கு என்பதை ஹதீஸ் தெளிவுபடுத்தும்.

உதாரணமாக, குர்ஆன் தாமாகச் செத்தவை ஹராம் என ஒட்டு மொத்தமாகக் கூறும் போது அதில் மீன் அடங்காது. அது விதிவிலக்கு என்பதை ஹதீஸ் தெளிவுபடுத்தும்.

  1. குர்ஆனில் கூறப்படாத அதிகப்படியான சட்டங்களை ஹதீஸ் எடுத்துரைக்கும்.

இவ்வாறு எல்லா வகையிலும் குர்ஆனுக்கு விளக்கமாகத்தான் ஹதீஸ் இருக்கும். குர்ஆனுக்கு முரணாகவோ, குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றும் வகையிலோ ஹதீஸ் இருக்காது. குர்ஆனுக்கு முரணாக வரும் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது என்பதே உண்மையாகும்.