Tamil Bayan Points

06. மார்க்கம் மரணப் படுக்கையில்

நூல்கள்: முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

Last Updated on October 30, 2022 by

5. மார்க்கம் மரணப் படுக்கையில்

رأى بفج سقيما *منه ابتغى أن يقيما

لما غدا مستقيما * ناداه أن يا قوامي

إني لدين الرشاد * أحييتني كي ينادي

لكم به كل نادي * يا محيي الدين حامي

முஹ்யித்தின் மவ்லிதில் உள்ள ஐந்தாம் பாடலின் சில வரிகள் இவை. இதன் பொருள் வருமாறு.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஒரு நோயாளியைக் கண்டார்கள். அந்த நோயாளி தம்மை எழுப்பி விடுமாறு அப்துல் காதிர் ஜீலானியைக் கேட்டுக் கொண்டார். எழுந்து நின்றதும், என்னை நிலை நிறுத்தியவரே நான் தான் நேரான மார்க்கம் என்னை உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவரே) என்று அந்த நோயாளி கூறினாராம்.

இந்தப் பாடல் வரிகளில் கூறப்பட்ட இந்தக் கற்பனைக் கதை ஹிகாயத் என்ற பகுதியில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் பார்த்து விட்டு இதன் அபத்தங்களை அலசுவோம்.

முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று உங்களுக்குப் பட்டம் கிடைக்கக் காரணம் என்ன? என்று அப்துல் காதிர் ஜீலானியிடம் கேட்கப்பட்டது. நாங்கள் பாக்தாத்துக்குச் செருப்பணியாமல் திரும்பி வந்த போது வழியில் நிறம் மாறிய நோயாளி ஒருவரைக் கண்டேன். அவர் எனக்கு ஸலாம் கூறினார். நானும் அவருக்கு ஸலாம் கூறினேன். என்னை உட்காரச் செய்யுங்கள் என்று அவர் கூறினார். நான் உட்கார வைத்தேன். அவரது உடல் வளர்ந்து நல்ல நிறத்துக்கு வந்தது. நான் யாரெனத் தெயுமா? என்று அவர் கேட்டார். நான் தெரியாது என்றேன். அதற்கவர் நான் தான் இஸ்லாமிய மார்க்கம். நான் பலவீனப்பட்டிருந்தேன். உம் மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனவே நீர் தாம் முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று கூறினார்.

உடனே நான் பள்ளிக்கு வந்தேன். அங்கே ஒருவர் எனக்காகச் செருப்பை எடுத்து வைத்து என் தலைவரே! முஹ்யித்தீனே! எனக் கூறினார். தொழுது முடிந்ததும் மக்களெல்லாம் என்னை நோக்கி விரைந்து வந்து என் கையை முத்தமிட்டு முஹ்யித்தீனே என்று கூறினார்கள். வலப்புறம், இடப்புறம் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் வந்து இவ்வாறு என்னை அழைத்தார்கள். அந்த நேரத்துக்கு முன்பு வரை என்னை யாரும் இந்தப் பெயரில் அழைத்ததில்லை என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார்கள்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய நிகழ்ச்சி நடந்திருந்தால் இது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை அவர்கள் தமது நூலில் குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள். தமது உரைகளிலும் இதைத் தெரிவிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். அவர்களின் குன்யதுத் தாலிபீன் நூலிலோ, புதுகுல் கைப், அல்ஃபத்குர் ரப்பானி ஆகிய அவர்களின் உரைத் தொகுப்புக்களிலோ இந்த அற்புத நிகழ்ச்சி(?) கூறப்படவில்லை. அவர்களின் காலத்தில் மற்றவர்கள் எழுதிய நூற்களிலும் இந்த விபரம் கூறப்படவில்லை. அப்துல் காதிர் ஜீலானிக்குப் புகழ் சேர்க்கும் எண்ணத்தில் பிற்காலத்தவர்கள் திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர் என்பதை இதிலிருந்து சந்தேகமின்றி அறியலாம்.

மறுமையில் ஒருவனது நல்லறங்கள் மனித உருவில் வரும் என்று பல ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் இவ்வுலகிலேயே அவ்வாறு மனித வடிவில் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமோ, நபித்தோழர்களிடமோ இஸ்லாமிய மார்க்கம் மனித வடிவில் வந்து உரையாடியதில்லை. அப்துல் காதிர் ஜீலானியிடம் மட்டும் தான் இந்த மார்க்கம் மனித வடிவில் வந்திருக்கிறது என்று கூறப்படுவது இக்கதை இட்டுக்கட்டப்பட்டது என்பதை உறுதி செய்கின்றது.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் மார்க்கம் மரணப் படுக்கையில் கிடக்கவில்லை. மார்க்கத்தைப் பேணும் மக்கள் ஏராளமாக இருந்தனர். மார்க்க அறிஞர்கள் நிறைந்திருந்தனர். இஸ்லாமியக் கல்விக் கூடங்கள் பல இருந்தன. மக்களிடம் ஒரு சில தவறுகள் காணப்பட்ட போது அப்துல் காதிர் ஜீலானியைப் போல் இன்னும் ஆயிரமாயிரம் அறிஞர்கள் அவற்றைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார்கள். தீனை உயிர்ப்பிக்கும் நிலையும் இருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இவர் மட்டும் இந்த மார்க்கத்தை உயிர்ப்பித்தார் என்பது சரியில்லை.

இம்மார்க்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுள்ளான். மார்க்கத்தை மனித வடிவில் நடமாடவிட்டால் என்ன ஆகும்? இந்த மார்க்கம் பாதுகாக்கப்பட இயலாத நிலை ஏற்பட்டுவிடும். ஒவ்வொருவனும் எதையாவது சொல்லி விட்டு, அல்லது செய்து விட்டு மார்க்கம் மனித வடிவில் வந்து இதை எனக்குக் கூறியது என்று நியாயம் கற்பிப்பான்.

எந்தத் தவறையும் இதைக் கூறி நியாயப்படுத்தலாம். இதனால் மார்க்கம் பாதுகாக்கப்படும் நிலைக்குக் குந்தகம் ஏற்படும். இதனால் தான் மார்க்கத்தை மனித வடிவிலெல்லாம் இறைவன் நடமாட விடவில்லை. இந்தக் கதையை நம்புவது சமுதாயத்தை ஏமாற்றத் தான் உதவும்.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தை விட மோசமான நிலையில் இன்று மார்க்கம் உள்ளது. அவரது காலத்தில் காணப்பட்டது போன்ற பேணுதல் இன்று இல்லை.

இதைப் பயன்படுத்திக் கொண்டு எவனாவது. நான் பலவீனப்பட்டிருந்தேன். உம் மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனவே நீர் தாம் முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று இஸ்லாமிய மார்க்கம் என்னிடம் கூறியது என்று உளறினால் மவ்லிது பக்தர்கள் நம்புவார்களா? அதை நம்புவதை விட இதை நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது என்றாலும் இவர்கள் நம்ப மாட்டார்கள். அப்படியானால் இந்தக் கதையை மட்டும் எப்படி நம்பலாம்? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

முஹ்யித்தீன் மவ்லிதில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கடவுளாகச் சித்தக்கப்பட்டுள்ளார் என்பதைப் பின்வரும் வரிகளிலும் காணலாம்.