Tamil Bayan Points

56) நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

Last Updated on March 3, 2022 by

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு மாற்று மத சகோதரி கூறுகிறார்! இதற்கு என்ன விளக்கம்?

– சி. முஹம்மது வாசிம், கொள்ளுமேடு.

பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தான் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் நாற்பதாம் வயது முதல் மரணிக்கும் வரை உள்ள வாழ்க்கையில் தான் முஸ்லிம்களுக்கு முன் மாதிரி இருக்கிறது.

இந்த அடிப்படையை அவருக்கு முதல் புரிய வையுங்கள். கதீஜா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயதில் தான் மணந்தார்கள்.

5090- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ.

அழகுக்காகவும், பாரம்பர்யத்திற்காகவும், செல்வத் திற்காகவும், நன்னடத்தைக்காகவும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளப்படுகிறார்கள். நீ நன்னடத்தை யுடையவளை மணந்து வெற்றி பெறு என்பது இறைத் தூதராக ஆன பின் நபிகள் நாயகம் காட்டிய வழி..

(நூல்: புகாரி 4700)

இவ்வாறு கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணத்திற்காக கதீஜா (ரலி) அவர்களை மணந்திருக்க முடியாது. கதீஜா (ரலி) அவர்களின் நன்னடத்தைக்காகத் தான் மணந்திருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் பணத்திற்காக மணந்திருந்தால் பணத்தைக் கட்டிக் காக்க அவர்கள் முயன்றிருப்பார்கள்.

ஆனால் அனைத்தையும் மக்களுக்கு வாரி வழங்கினார்கள். எஞ்சியவற்றைத் துறந்து நாட்டை விட்டு அகதியாக வெளியேறத் துணிந்தார்கள். அடைமானம் வைக்கப்பட்ட தமது கவச ஆடையை மரணிக்கும் போது கூட மீட்க முடியாத வறிய நிலையில் மரணித்தார்கள்.

பணத்திற்காக ஒரு பெண்ணை மணந்த யாரும் இப்படி நடக்கவே முடியாது என்பதையும் விரிவாக விளக்குங்கள்