Tamil Bayan Points

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா?

கேள்வி-பதில்: பித்அத்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா?

786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள் முடியாதா?

பதில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் முதல் முறை தவறானது என்பதும் இரண்டாவது முறை அனுமதிக்கப்பட்டது என்பதும் தெளிவாகிவிடும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி துவங்குவது இஸ்லாம் கற்றுக் கொடுத்த ஒரு வணக்கம். இஸ்லாமிய வணக்க முறைகளை நம் இஷ்டத்துக்கு செய்யக் கூடாது. குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டவாறே செய்ய வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை 786 என்று குறிப்பிடலாம் என குர்ஆனிலோ, நபிகளாரின் பொன்மொழிகளிலோ கூறப்படவில்லை. எனவே இவ்வாறு குறிப்பிடுவது மார்க்கத்தில் இல்லாத அநாச்சாரமாகும்.

அடுத்து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அரபுச் சொல்லாகும். இந்த அரபுச் சொல்லை 786 என்ற எண்ணில் குறிப்பிடுவதாக இருந்தால் இவ்வாறு குறிப்பிடும் வழக்கம் அரபு மொழியில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு எழுதும் வழக்கம் அரபுமொழியில் அறவே கிடையாது. தமிழ் மொழி பேசக்கூடிய நமது சமுதாயத்திலும் இப்படியொரு வழக்கம் இல்லை.

ஒரு சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் குறிப்பிட்ட எண்களை வழங்கி மொத்த எண்களையும் கூட்டி கிடைக்கும் எண்ணால் அச்சொல்லை குறிப்பிடும் இம்முறை யூதர்கள் கண்டுபிடித்த முட்டாள்தனமான முறையாகும்.

அலிப் பா என்ற அரபு எழுத்துக்கள் ஹிப்ரு மொழியிலும் உள்ளது. அலிபுக்கு ஒன்று, பாவுக்கு இரண்டு, ஜீமுக்கு மூன்று தாலுக்கு நான்கு என்று ஹிப்ரு மொழியில் சொல்லப்படுகிறது. இதில் ஜீம் என்பதை மூன்றாகவும் தால் என்பதை நான்காகவும் சொல்கின்றனர். ஹிப்ரு மொழியில் மூனாவது எழுத்து ஜீம், நாலாவது எழுத்து தால் ஆகும் என்பதால் அவர்களுக்கு இந்த வரிசை சரிதான். ஆனால் அரபு மொழியில் தா என்பது மூனாவது எழுத்தாகும். ஸா என்பது நான்காவது எழுத்தாகும். இதைக் கூட கவனிக்காமல் யூதர்களின் அகர வரிசையை அப்படியே காப்பி அடித்துள்ளனர்.

ஒருவரின் பெயரைச் சுருக்கி அழைப்பது இது போன்றதல்ல. மனிதப் பெயர்களைச் சொல்வது வணக்கமில்லை. வணக்கமில்லாத விஷயங்களில் நமது இஷ்டப்படி செய்வது தவறில்லை.

மேலும் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கம் நமது மொழியில் இருக்கின்றது. பலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். கடைகளுக்கும், பேருந்துகளுக்கும் கூட இவ்வாறு பெயர் வைக்கப்படுகின்றது. எனவே இதுவும் 786 என்று எழுதுவதுவும் ஒரே மாதிரியானதல்ல.