Tamil Bayan Points

இஹ்ராம் – இந்த பதில் சரியா?

மற்றவை: _24-Pending

Last Updated on June 29, 2017 by Trichy Farook

இஹ்ராம் கட்டிய பின்னர் கணவன் மனைவியிடம் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பரிகாரம்?

பதில்

சவூதியைச் சேர்ந்த அறிஞர்கள் இதை இரண்டு நிலைகளாகப் பிரிக்கின்றனர். 1. முதல் விடுதலைக்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது.

பத்தாம் நாளன்று கடைசி ஜம்ராவில் கல்லெறிந்து விட்டால் நறுமணம் பூசிக் கொள்ளலாம்; தையல் ஆடை அணிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவை செய்து முடிக்கின்ற வரை உடலுறவைத் தவிர இஹ்ராமில் தடுக்கப்பட்ட அனைத்துக் காரியங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதற்குத் தான் முதல் விடுதலை என்று பெயர்.

தவாஃபுல் இஃபாளாவை முடித்துவிட்டால் உடலுறவுக்குரிய தடையும் நீங்கி விடுகின்றது. இதற்கு இரண்டாவது விடுதலை என்று பெயர்.

இவ்வாறு முதல் விடுதலைக்கு முன்பு, அதாவது முழுமையான இஹ்ராமின் போது உடலுறவில் ஈடுபட்டுவிட்டால் இரண்டு வகையான தீர்வுகளைக் கூறுகின்றனர்.

1. உழ்ஹிய்யாவில் கொடுப்பது போன்று ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை பரிகாரமாகக் குர்பானி கொடுத்து அந்த இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக் கூடாது. 2. அவருடைய ஹஜ் வீணாகி விடுகின்றது. அவர் தாமதமின்றி மறு ஆண்டு அந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டாம் நிலை, முதல் விடுதலைக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடுவதாகும்.

இவ்வாறு ஈடுபட்டுவிட்டால் இரண்டு தீர்வுகளைக் கூறுகின்றனர்.

1. ஓர் ஆட்டை அறுத்து, ஏழைகளுக்குப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அந்த இறைச்சியை அவர் சாப்பிடக்கூடாது.

2. ஹரம் எல்லைக்கு அப்பால் அருகில் உள்ள இஹ்ராம் கட்டுகின்ற எல்லைக்குப் போய் தனது இஹ்ராமைப் புதுப்பித்து, இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்து ஹஜ்ஜுக்குரிய தவாஃபுல் இஃபாளாவைச் செய்ய வேண்டும்.

இஹ்ராமுக்குப் பிறகு ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்குரிய பரிகாரம் இது என்று சவூதியைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளிக்கின்றனர்.

இவ்வாறு தீர்ப்பளிக்கும் ஆலிம்கள் இதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டவில்லை.

நமக்குத் தெரிந்த வரை நோயாளிகள், தலையில் காயம், புண் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள், ஹஜ்ஜின் போது குர்பானி கொடுக்க இயலாதவர்கள், வேட்டையாடியவர்கள் போன்றவர்களுக்குரிய பரிகாரத்தை குர்ஆன் ஹதீஸில் நாம் பார்க்க முடிகின்றது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:196

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!” என்றேன். அதற்கு “உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுது; அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாஉ தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1815

இங்கு நோயாளிகள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள், பேன் பற்றியவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் குறித்துக் கூறப்படுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:94, 95

இந்த வசனம், வேட்டையாடுவதற்குரிய பரிகாரத்தைக் குறிப்பிடுகின்றது.

இதைத் தவிர இஹ்ராமின் போது ஏற்படுகின்ற வேறு குற்றங்களுக்குப் பரிகாரத்தைக் காண முடியவில்லை.

இஹ்ராமில் இருப்பவர் முதல் விடுதலைக்கு முன்போ, அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால் இன்னது தான் பரிகாரம் என்று குர்ஆன், ஹதீஸில் கூறப்படவில்லை.

அப்படியானால் இதுபோன்ற தவறுக்குப் பரிகாரம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

ஒருவர் உளூச் செய்கின்றார். உளூ முறிந்து விட்டால் அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். இதுதான் அதற்குரிய பரிகாரம். ஒருவர் தொழுகின்றார். தொழுகையில் உளூ முறிந்து விடுகின்றது. அந்தத் தொழுகையை அவர் மீண்டும் தொழ வேண்டும். இதுபோன்று ஒருவர் ஹஜ் செய்யும் போது அதற்காக இஹ்ராமில் நுழைந்து விட்டார்.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:197

அல்லாஹ் கூறும் இந்தத் தடையை மீறி, உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அவர் அந்த ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். அதுதான் இதற்குரிய பரிகாரமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.