Tamil Bayan Points

பொறுப்புள்ள பெற்றோர்களாக ஆகுவோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

Last Updated on October 8, 2023 by Trichy Farook

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் நம் மீது ஏராளமான பொறுப்புகளை சுமத்தியிருக்கிறது.

أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.

நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.  

(நூல்: முஸ்லிம்-3733)

மேற்கண்ட பல்வேறு பொறுப்புகளில் ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான் என்று நபி (ஸல்) கூறுகிறார்கள். இதில், தந்தை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய அறிவுரைகள், பிள்ளைகளிடத்தில் நடக்க வேண்டிய முறைகளை குறித்தும், இஸ்லாம் அதிகமதிகம் வலியுறுத்திக் கூறுகிறது.

முன்மாதிரியாக இருக்க வேண்டும்!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதற்கு முன், முதலில் அவர்கள் அந்த நற்பண்களை கடை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ரோல் மாடல். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைப் பார்த்துதான் அவர்களுடைய பழக்க வழக்கங்களும் அமையும். நல்ல குழந்தைகளாக வளர்க்க நினைப்பவர்கள், முதலில் நல்ல பெற்றோராக இருக்க வேண்டும்.

كُنْتُ أَقْرَأُ عَلَى أَبِي الْقُرْآنَ فِي السُّدَّةِ، فَإِذَا قَرَأْتُ السَّجْدَةَ سَجَدَ، فَقُلْتُ لَهُ: يَا أَبَتِ، أَتَسْجُدُ فِي الطَّرِيقِ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَوَّلِ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ؟ قَالَ «الْمَسْجِدُ الْحَرَامُ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الْمَسْجِدُ الْأَقْصَى» قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ عَامًا، ثُمَّ الْأَرْضُ لَكَ مَسْجِدٌ، فَحَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَصَلِّ»

இப்ராஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலை ஒட்டியுள்ள இடத்தில் என் தந்தை (யஸீத் அத்தைமீ) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நான் “சஜ்தா” வசனத்தை ஓதியவுடன் என் தந்தை (அங்கேயே) சஜ்தாச் செய்தார்கள். நான், “தந்தையே! (நடை)பாதையில் சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறீர்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், பூமியில் முதன் முதலில் அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்” என்று பதிலளித்தார்கள். “பின்னர் எது?” என்று கேட்டேன். (ஜெரூஸலத்திலுள்ள) “அல்மஸ்ஜிதுல் அக்ஸா”” எனறார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” என்று கூறினார்கள். “பிறகு பூமி முழுவதுமே உங்களுக்குத் தொழுமிடம்தான். ஆகவே, உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் அங்கே நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்!” என்றும் சொன்னார்கள்

(நூல்: முஸ்லிம்-904)

இன்றைக்கு நாம் இவ்வாறு இருக்கிறோமா? பேருந்தில், இரயிலில் தொழுகை நேரம் வந்ததும், தொழுபவர் எத்தனை பேர்? சிந்தித்துப் பாருங்கள். நாமே தொழாமல் இருந்தால், நம்மைப் பார்த்து வளரும் நம் பிள்ளைகளும் இப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களுடன் நேரம் செலவிடுதல்

உங்கள் குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் போதிலிருந்தே, அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிடுங்கள். உங்கள் அன்பை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சியுங்கள்.

பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்!

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், “அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?” என்று கேட்டார்.

உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், “சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என்று கேட்டார்கள். “என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.

(பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்க்விலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.

(நூல்: முஸ்லிம்-192)

வசைபாடும் பெற்றோர்கள்!

சாதாரணமாக குழந்தைகளை பெற்றோர்கள் திட்டுவார்கள். சில வீடுகளில் கர்ண கடூரமான பேச்சுகளும் திட்டுக்களும் இருக்கும். அவற்றை கேட்கும் குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு குறைந்துவிடும். அவர்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்துமே மூளையில் பதிவாகி, நாம் இப்படிதான் போலிருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக உனக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறவே ஏறாது.. ராஸ்கல்.. இப்படிப்பட்ட வார்த்தைகள். உனக்கு இங்கிலீஸ்னா சுத்தமாவே வரமாட்டேங்குது.. மண்டு. மண்டு… இதுபோன்ற வார்த்தைகள் குழந்தைகளை கேட்க கேட்க, நமக்கு ஆங்கிலமே வராது போலிருக்கிறது என்ற எண்ணம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பிறகு என்னதான் ஆங்கிலம் கற்று கொடுத்தாலும், அவற்றை மனதில் இறுத்தி அவர்களால் படிக்கவே முடியாது.

மனித மூளையில் 160 கோடி நியூரான்கள் உள்ளது. ஒவ்வொரு நியூரானிலும் 2 லட்சம் தகவல்கள் சேமித்து வைக்கலாம். மனித மூளையே உலகத்தின் மிகச்சிறந்த சென்ட்ரல் பிராச்சங் யூனிட், ஹார்ட் டிஸ்க் எல்லாமே. மற்றதுதான் சூப்பர் கம்ப்யூட்டர், மினி கம்ப்யூட்டர் இப்படி பட்ட கம்ப்யூட்டர் ஐட்டங்கள்.

மனித மூளையை முழுவதுமாக பயன்படுத்துபவர்கள் யாருமே இல்லை. ஒரு சதவிகித மூளையில் பயன்படுத்தியவர்கள் உலகத்தில் அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இருக்கிறார்கள். அப்படியென்றால் முழுமையான மூளையை பயன்படுத்துபவர்கள் என்றால் நிச்சயமாக இந்த உலகத்தை அவர்களால் புரட்டி போட முடியும்.

குழந்தைகளை திட்டும்போது!

இவ்வளவு திறன்கொண்ட மூளை அனைவருக்கும் இருக்கிறது. குழந்தைகளை திட்டும்போது இவ்வளவு திறன் வாய்ந்த மூளையானது மழுங்கடிக்கப்படுகிறது. விளக்கமாக கூற வேண்டுமென்றால் இயற்கையாகவே மனித மூளையில் 10000 த்திலிருந்து, 15000 வரையிலான நியூரான்கள் அழிந்துவிடும்.

ஒரு குழந்தையை திட்டும்போது, 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான நியூரான்கள் அழிந்துவிடுகிறது. பிறகு அந்த நியூரான்களில் தகவல்களை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால்தான் குழந்தைகளை திட்டவே கூடாது என கூறுகின்றனர்.

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடமும் போக ஆரம்பித்துவிடுகிறது. எப்படி படிக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக சத்தம்போட்டு உரக்க படிக்க வேண்டும். அப்போதுதான் மூளை சோர்வடையாமல் இருக்கும். மனதிற்குள்ளேயே படிக்க ஆரம்பித்தால் சீக்கிரமே தூக்கம் வர ஆரம்பித்துவிடும். மூளைக்கு வேலை குறைவதால் இதுபோன்ற தூக்கம் ஏற்படும்.

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை வாய்விட்டு பாராட்ட வேண்டும். பாராட்டுக்கு குறைவே இருக்க கூடாது. சில தவறுகளை செய்யும்போது, கவனமாக அந்த தவறால் என்ன பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைச் சொல்லி, இனி அவ்வாறு செய்யாமல் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தையை பாராட்டும்போது, குழந்தையின் செயல்திறன் பல மடங்கு மேன்படுகிறது. பாராட்டும்போது அதனுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கப்பட்டு, மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. ஊக்குவிக்கப்படும் குழந்தைகள் விரைவாக கற்றுக்கொள்கிறது.

லுக்மான் அழைத்த விதம்!

عَنْ عَبْدِ اللهِ، قَالَ
لَمَّا نَزَلَتْ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالُوا: أَيُّنَا لَا يَظْلِمُ نَفْسَهُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ، إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ: {يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} [لقمان: 13]

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு” எனும் (அல்குர்ஆன்: 6:82) ஆவது இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது.

மேலும், அவர்கள் “எங்களில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தம் இல்லை. உண்மையில் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் “என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது தான் மாபெரும் அநீதியாகும்” என்று சொன்னதாக (அல்குர்ஆன்: 31:13) ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்ப)துதான் அதற்குப் பொருள் ஆகும்.

(நூல்: முஸ்லிம்-197)

தந்தைக்கு கட்டுப்பட்ட மகன்!

فَلَمَّا اسْتَايْــٴَــسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا‌ ؕ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِىْ يُوْسُفَ‌ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَاْذَنَ لِىْۤ اَبِىْۤ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِىْ‌ ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ‏

….எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா?.

ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.

(அல்குர்ஆன்: 12:80)

பிள்ளையை வளர்த்த விதம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது.

அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.

அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.

அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (அல்குர்ஆன்: 5:6) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர்.

(இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.

(நூல்: முஸ்லிம்-599)

தந்தை மகனின் மீது வைத்த நம்பிக்கை.

 اِرْجِعُوْۤا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ‌ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ‏

ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;

وَسْــٴَــلِ الْقَرْيَةَ الَّتِىْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِىْ اَقْبَلْنَا فِيْهَا‌ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏

“நாங்கள் தங்கியிருந்த ஊர்வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் – நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).

 قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ؕ فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ عَسَى اللّٰهُ اَنْ يَّاْتِيَنِىْ بِهِمْ جَمِيْعًا‌ؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.

(அல்குர்ஆன்: 12:81-83)

பாராட்டும் தண்டனையும்

வார்த்தைகளால் பாராட்டுதல், திண்பண்டங்களை பரிசாக அளித்தல், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஒழுக்கமான நடத்தைகளை ஊக்குவிக்கலாம். விரும்பத்தகாத நடத்தைகளை ஒதுக்கும் விதமாக முகம் சுளித்தல், முகத்தை திருப்பிக் கொள்ளுதல், பாராட்டு வார்த்தைகளை கூறாமல் இருத்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் ஒழுக்கம் தவறி நடந்தார்கள் என்பதற்காக அடித்தல், சூடு வைத்தல், கிள்ளி வைத்தல் போன்ற தண்டனைகளை அளிக்கக் கூடாது. தண்டனைகள் ஒருபோதும் கெட்ட பழக்கங்களை குறைத்து நல்ல பழக்கங்களை அதிகரிப்பதில்லை என்பதே உளவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்பு.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!

أَخَذَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كِخْ كِخْ» لِيَطْرَحَهَا، ثُمَّ قَالَ: «أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹசன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் சீ; சீ எனக் கூறித் துப்பச் செய்துவிட்டு, நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா? என்றார்கள்.

(நூல்: புகாரி-1491)

உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை

இதை சாப்பிடக் கூடாது. அதை சாப்பிடக்கூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும்.

தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது.

கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது.

குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.

உணவிலும் ஒழுக்கம் கற்பித்த உன்னத நபி!

يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ

அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் இப்னு அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரி-5376 , முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.