Tamil Bayan Points

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on April 18, 2019 by

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா?

1948 ஆம் ஆண்டு காந்தியடிகளை காவி அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக கோட்சே சுட்டுக் கொன்றான். தேசத் தலைவர்கள் அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய இரு நாள்களும் கொண்டாடப்படுகின்றன. காந்தி கொல்லப்பட்ட நாளை நினைவு தினமாக கொண்டாடினால் காந்தியை கோட்சே கொன்றது நினைவுக்கு வரும். இந்த நினைப்பு யாருடைய உள்ளத்திலும் வந்து விடக் கூடாது என்பதற்காக காந்தி கொல்லப்பட்ட நாளை தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரித்து, காந்தியின் கொலையை மறைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கோட்சேவின் குண்டு துளைத்து காந்தி இறக்கவில்லை. மாறாக நான்காவது குண்டை ஒருவர் சுட்டார். அந்தக் குண்டு துளைத்து தான் காந்தி இறந்தார் எனக் கூறி காந்தி கொலைக்கும், கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என நிறுவ ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது பெயர் பங்கஜ் முகுத் சந்த் பத்னீஸ். இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர். இந்த அமைப்பை துவக்கியவர் சவர்க்கர் ஆவார். கோட்சே உள்ளிட்டவர்களைத் தூண்டி விட்டு இவர் தான் காந்தியைச் சுட வைத்தார். காந்தியின் கொலைக்காக கைது செய்யப்பட்டவர்களில் சவர்க்கரும் ஒருவராவார்.

பின்னர் எப்படியோ வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த அபினவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் தான் மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், கோவா, அஜ்மீர் தர்கா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கஜ் தொடுத்த இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ அமரேந்திர சரண் என்பவரை உச்ச நீதி மன்றம் நியமித்தது. இவர் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஆவார்.

இவர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ‘நாதுராம் கோட்சே தவிர வேறொருவர் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றார் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.4வது குண்டு பாய்ந்தால் தான் காந்தி கொல்லப்பட்டார் என்ற வாதத்தை நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை. காந்தி கொலையில் வெளிநாட்டு சதி இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. காந்தியின் மரணத்திற்குக் காரணமான குண்டு, துப்பாக்கி, சுட்டவர், சதி, சதிக்குப் பின்னால் இருந்த சித்தாந்தம் ஆகிய அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதில் சந்தேகம் எழுப்பவோ, மறு விசாரணை நடத்தவோ, வேறு ஆணையம் அமைக்கவோ எந்த முகாந்திரமும் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 4 ஆயிரம் பக்க ஆவணங்கள், மற்றும் இச்சம்பவம் தொடர்பாக 1969ஆம் ஆண்டு விசாரணை நடத்திய ஜீவன்லால் கபூர் விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றை முழுமையாகப் படித்த பிறகு இந்த அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பித்துள்ளார்.அமரேந்திர சரண்.

இதன் பிறகு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு ‘மிகப் பெரிய மனிதர்கள் தொடர்பாக வழக்கு தொடரும் போது ஆதாரங்கள் இன்றி தொடரக் கூடாது. வழக்கை நடத்துவதற்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே வழக்கை நடத்த இயலும். எனவே மனுதாரர், காந்தி இறந்து இவ்வளவு காலம் கழித்து வழக்கு தொடர்ந்தது ஏன்? இந்த வழக்கின் மீதான தகுதி என்ன? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

காந்தியைக் கொலை செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து விலகி விட்டார். ஆர்.எஸ்.எஸ். மீது பழி வந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த விலகல் நாடகம் நடந்தது. இது அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் படேலுக்குத் தெரியும் என்பதால் காந்தியின் கொலை நடந்தவுடன் படேல் ஆர்.எஸ். எஸ்.ஸை தடை செய்தார். ஆனாலும் ஆர்.எஸ். எஸ்.எஸ் க்கும், கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று தான் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் கூறி வருகிறார்கள். இதை கோட்சேவின் தம்பியும், காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவருமான கோபால் கோட்சே மறுத்து வருகிறார்.

இப்படி காந்தியின் கொலைக்கும், ஆ ர் . எ ஸ் . எ ஸ் . க்கும் சம்பந்தமில்லை என சொல்பவர்கள் கோட்சேவின் குண்டு பாய்ந்து காந்தி இறக்கவில்லை என அறிவிக்க உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இதில் இவர்கள் வெற்றி பெற்று விட்டால் காந்தி சுடப்படவில்லை. தற்கொலை செய்து இறந்து விட்டார் என பிரச்சாரம் செய்ய கிளம்பி விடுவர். இதை இந்த தேசம் அனுமதிக்கப்போகிறதா? அல்லது காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளை காந்தியின் நினைவு நாளாக அனுசரித்து கோட்சேவின் கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடப் போகிறதா? காத்திருந்து கவனிப்போம்.